ஐதராபாத்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்து உள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா முன்னிலை:
இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது.
மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையின் குறுக்கிட்டால் ஆட்டம் 35 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது. இதில் 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 107 ரன்களை சேர்த்தது.