பாரீஸ்: 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று (ஜூலை.29) மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிந்தல் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரமீதா ஜிந்தல் முதல் ஐந்து சுற்றுகளில் 52.5 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தில் இருந்தார்.
சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை ரமீதா ஜிந்தல் பெற்றுத் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும் அடுத்தடுத்த சுற்றுகள் அவருக்கு சாதகமாக அமையவில்லை. இரண்டாவது பிரிவில் அவர் விறுவிறுவென புள்ளிப் பட்டியலில் கீழே இறங்கினார்.
கடைசியாக 6வது இடத்தில் இருந்த ரமீதா ஜிந்தல், தனது இறுதி வாய்ப்பில் 10.5 புள்ளிகள் எடுத்தார். இருப்பினும் பிரான்ஸ் வீராங்கனை ஓசியானா முல்லர் 10.8 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். இதனால் இந்திய வீராங்கனை ரமீதா ஜிந்தல் 0.3 புள்ளிகள் வித்தியாசத்தில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.