ஐதராபாத்:வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் 113 ரன்களும் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார் தமிழக வீரர் அஸ்வின். அதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் பெற்ற தொடர் நாயகன் விருதுகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்தது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் (11 முறை) சாதனையையும் அஸ்வின் சமன் செய்து புது உலக சாதனை படைத்தார்.
இந்நிலையில், முத்தையா முரளிதரனின் சாதனையை கடந்த ஆண்டே அஸ்வின் சமன் செய்து இருக்க வேண்டும் என்றும் தற்போது வங்கதேச தொடரில் அவர் வென்ற தொடர் நாயகன் விருது உலக சாதனையாகி இருக்க வேண்டும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி அதில் 1-க்கு 0 என்ற கணக்கில் தொடரி கைப்பற்றியது.
அந்த தொடரில் அஸ்வின் ஒட்டுமொத்தமாக 15 விக்கெடுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதுக்கான பட்டியலில் முன்னிலை வகித்தார். இருப்பினும், அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை. அவருக்கு அப்போது தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு இருந்தால் தற்போதைய வங்கதேச தொடர் நாயகன் விருதின் மூலம் அவர் உலக சாதனை படைத்து இருப்பார்.