தர்மசாலா: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசன் கிளைமாக்ஸ் காட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதில் இன்று (மே.9) தர்மசாலாவில் நடைபெறும் 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் தலா 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முறையே 7வது மற்றும் 8வது இடத்தில் உள்ளன. இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் தலா 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, அடுத்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் கட்டாய வெற்றியினை பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் இன்றைய போட்டியில் எந்த அணி தோற்கிறதோ அந்த அணி வெளியேற்றப்படும் என்பதால் இரு அணிகள் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக விளையாடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.