தர்மசாலா: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் கிளைமாக்ஸ் காட்சிகளை நெருங்கி உள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்துகளும் கடுமையாக போராடி வருகின்றன.
அதில் இன்று (மே.5) மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 53வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி தலா 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய 10 ஆட்டங்களில் 4ல் வெற்றியும், 6 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
நடப்பு சீசனில் இரு அணிகளும் 2வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. இதற்கு முன் கடந்த 1ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றிருந்தது. முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு சென்னை அணி இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுக்கும் முனையும் என்பதில் சந்தேகமில்லை.
அதேநேரம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளன. சென்னை அணியை பொறுத்தவரை தீபக் சஹர் காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் பாதியில் விலகினார். அவர் பூரண குணம் பெற்று இந்த ஆட்டத்தில் களமிறங்குவதற்கு வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது.
அதேபோல் முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கதேசம் அணியுடன் இணைந்ததால் இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் அவர் இடம் பெற வாய்ப்புகள் இல்லை எனக் கருதப்படுகிறது. இதனால் சென்னை அணியில் புதுமுக வீரர்கள் பலர் இன்றைய ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிக்காக இரு அணி வீரர்களும் மல்லுக்கட்டுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க:பஞ்சாப் கிங்ஸ்க்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே..தரம்சாலாவில் இன்று மோதல்! - CSK Vs PBKS Preview