ஹைதராபாத்:இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான டி20 போட்டிகள் நாளை (ஜூலை 27) தொடங்கவுள்ளது. இத்தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படவுள்ளார். மேலும், இந்திய டி20 அணியை சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரை வழக்கம் போல ரோகித் சர்மா வழிநடத்தவுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பிரக்யான் ஒஜாவிடம், இலங்கைக்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் ஹர்ஷித் ராணா இடம் பிடித்தது குறித்து ஈடிவி பாரத் கேட்டபோது, “ஹர்ஷித் ராணாவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. அவரது திறமையால் இந்தியா கண்டிப்பாக பயனடையும். அவர் ஒருநாள் தொடரில் பந்துவீசுவதை பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன். ஏனென்றால், அவர் ஐபிஎல் தொடரில் பந்துவீசுவதை மிகவும் ஆவலுடனும், உற்சாகத்துடனும் பார்த்தேன்" என பதிலளித்தார்.
கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், "இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அவருடன் பணியாற்றிய ஊழியர்களைப் பற்றி பேசும் போது இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கைப்பற்றியதைப் பற்றி நாம் பேசுவோம். மேலும், தற்போது தலைமை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர் மற்றும் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அபிஷேக் நாயர் 1.4 பில்லியன் மக்களின் விருப்பத்தை அடைய சிறப்பாக செயல்படுவார்கள்” எனக் கூறினார்.