சென்னை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த போட்டியில் பாதியிலேயே மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லுவிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் 18 வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 5வது பந்தில் அனுபவ பேட்ஸ்மேனான மஸ்மதுல்லா 2 ரன்கள் மட்டுமே எடுத்து தன் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்ததாக வந்த மெஹதி ஹசன் ஜாம்பாவிடம் கேட்ச் குடுத்து வெளியேறினார். 18 வது ஓவரில் ஐந்தாவது மற்றும் கடைசி பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை சாய்த்த நிலையில் மீண்டும் கடைசி ஓவரை வீசுவதற்காக கம்மின்ஸ் அழைக்கப்பட்டார்.