சென்னை:9வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்றுக்கான ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகின்றன. இதில், கிங்ஸ்டனில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இவர் ஏற்கனவே வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 18வது ஓவரில் ஐந்தாவது மற்றும் கடைசி பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை சாய்த்த நிலையில் மீண்டும் கடைசி ஓவரை வீசுவதற்காக கம்மின்ஸ் அழைக்கப்பட்டு அந்த ஓவரில் வீசிய முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதன்முதலாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய நபர் என்பது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் பேட் கம்மின்ஸ் படைத்தார். மேலும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் வீழ்த்தும் 7வது வீரராக கம்மின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்து கிங் கோலி சாதனை!