பாரீஸ்:பல்வேறு போராட்டங்களைக் கடந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான கால் இறுதி ஆட்டத்தில் உக்ரைனைச் சேர்ந்த ஒக்ஸானா லிவாச் என்பவரை 3-க்கு 0 என்ற கணக்கில் என்ற வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் - கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை எதிர் கொண்டார். பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார் வினேஷ் போகத். இதன் விளைவாக 5-0 என்ற புள்ளி கணக்கில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு இவர் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 11.23 மணிக்கு தொடங்கவுள்ளது.
இதுவரை கடந்த வந்த பாதை:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் நடந்த ரவுன்ட் ஆப் 16 சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை சுசய் யுய் (Susai Yui) எதிர்கொண்டார்.