துபாய்:9வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று(அக் 4) இந்தியா மகளிர் அணியும் - நியூசிலாந்து மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில், சுசி பேட்ஸ் - ஜார்ஜியா ப்ளிம்மர் ஜோடி களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரை பூஜா வஸ்தகர் வீசினார். முதல் பந்திலேயே பேட்ஸ் அதிரடியாக பவுண்டரி விளாசினார். முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் கிடைத்தன.
பவர் ப்ளே ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 55-0 என்ற கணக்கில் விளையாடியது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பேட்ஸ் அருந்ததி ரெட்டி வீசிய பந்து வீச்சில் அபாரமாக அவுட் ஆக, அமெலியா கெர் கைகோர்த்தார். இவரும் வந்த வேகத்தில் வெறும் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க அணி அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்நேரத்தில் தாப் சோஃபி டெவின் அதிரடியாக அரை சதம் விளாசி அணியைக் காப்பாற்றினார். இதற்கிடையில் ப்ரூக் ஹாலிடே 16 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும், மேடி கிரீன் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆட்ட முடிவில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகள் இழப்பில் நியூசிலாந்து அணி 160 ரன்களை குவித்தது. இதில், ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி மற்றும் ஆஷா சோபானா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.