டிரினிடாட்:கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் 32வது லீக் போட்டியில், நியூசிலாந்து - உகாண்டா அணிகள் மோதின.
டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய உகாண்டா அணி, நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அந்த அணியில் கே.வைஸ்வா 11 ரன்களைத் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கை தாண்டவில்லை. இதில் சைமன் செசாசி, ராபின்சன் ஒபுயா, அல்பேஷ் ரம்ஜானி ஆகிய மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஜூமா மியாகி ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
இதனால் 18.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது உகாண்டா. இதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டியிலும் 39 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது போல இந்தமுறையும் குறைந்த ரன்களுக்கு ஆல் ஆல் அவுட் ஆனது உகாண்டா.