ஹைதராபாத்: அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
இந்த நிலையில், இத்தொடருக்கான அணியை பிசிசிஐ இன்று (ஏப்.30) மாலை 4 மணி அளவில் அறிவித்திருக்கிறது. அதில் விபத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட், ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசி வரும் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
குறிப்பாக 4 ஓவர்கள் வீசிய நடராஜன் 1 ஓவரை மெயிடன் செய்து 4.80 எகானமியுடன் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார். மேலும், இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் அவர் 13 விக்கெட்களை வீழ்த்தி பெர்ப்பில் கேப்பிற்கான போட்டியில் உள்ளார்.