டெல்லி: ஐபிஎல் தொடரின் 35வது போட்டி நேற்று (ஏப்.20) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மூன்றாவது முறையாக அந்த அணி ஆர்.சி.பி-யின் சாதனையான 265 ரன்களைக் கடந்துள்ளது.
தொடர்க்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் பவர் ப்ளேயில் மட்டும் 125 ரன்கள் அடித்து சாதனை படைந்தனர். ஹெட் 89, அபிஷேக் சர்மா 46, சபாஷ் அகமத் 59 ரன்கள் அதிகபட்சமாக விளாசி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, 267 இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 65, அபிஷேக் போரேல் 42, ரிஷப் பண்ட் 44 ஆகியோர் அதிகபட்சமாக ரன்களை எடுத்தனர். இருப்பினும், டேவிட் வார்னர் போன்ற பெரிய வீரர்கள் ரன்கள் எடுக்கத் தவறியதால், அந்த அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஹைதரபாத் அணி சார்பில் நடராஜன் 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதைப் பெற்றாலும், தனது யாக்கர் பந்தால் 4 விக்கெட்களை வீழ்த்தி, அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.
பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் பிட்ச்சில் புவனேஷ்வர் குமார் போன்ற மற்ற பந்து வீச்சாளர்கள் 8 எக்கானமிக்கு மேல் ரன்களை வழங்கிய போது, நடராஜன் 4 ஓவர்கள் வீசி 4.8 எகானமில் 4 விக்கெட்களைக் கைப்பற்றி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார்.
குறிப்பாக, 19வது ஒவரை வீசிய நடராஜன் 1 ரன் கூட கொடுக்காமல் அக்சர் படேல், குல்தீப் யாதவ், நோர்ட்ஜெ ஆகிய 3 வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தி, டெத் ஓவர்களில் டெல்லி அணியை ரன்கள் சேர்க்க விடாமல் கட்டுப்படுத்தினார்.
புவனேஷ்வர் குமார் புகழாரம்: போட்டிக்குப் பின் ஹைதராபாத் அணியின் வேப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியதாவது, "இப்படி ஒரு பெரிய இலக்கை எதிரணிக்கு நிர்ணயிக்கும் போது, நாங்கள் அதிக ரன்களை வழங்குவோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
நாங்கள் எங்களது திட்டத்தைச் செயல்படுத்தி, விக்கெட்களை வீழ்த்த துவங்கும் போது சரியான வழியில் செல்லத் துவங்குவோம். நடராஜன் தன்னுடைய யாக்கர்களால் எந்த அளவிற்கு சிறப்பானவர் என்பதை நாங்கள் அறிவோம். அவர் கடினமாக உழைக்கக்கூடிய அமைதியான ஒருவர். அவர் உண்மையில் மேட்ச்-வின்னர்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
80 பவுன் தங்கச் செயின் பரிசு: தனது யாக்கர்களால் 4 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த நடராஜனுக்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக 80 பவுன் தங்கச் செயின் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 80 பவுன் தங்கச் செயினுடன் கேக் கட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இப்படி யாக்கர் வீசிவதில் இந்திய அணியில் பும்ராவிற்கு அடுத்தபடியாக திகழும் நடராஜன், வரும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:ஒரே நாளில் ரூ.4.2 கோடி சம்பாதித்த இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் 5 மாத பேரன்! எப்படி தெரியுமா? - Ekagrah Rohan Murty