சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.10) சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று (பிப்.8) நடந்து முடிந்தது. இதில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,15,512 வாக்குகள் பெற்று, 91,374 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலெட்சுமி, 24,138 வாக்குகள் பெற்று 2-ஆவது இடத்தைப் பிடித்தாலும், அவர் டெபாசிட் தொகையை இழந்தார். இந்த தேர்தலில் நோட்டா 3-ஆவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (பிப்.10) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் திமுக வெற்றி வேட்பாளர் சந்திரகுமாருக்கு சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, பதவியேற்றுக் கொண்ட சந்திரகுமார் மு.க.ஸ்டாலினிடம் ஆசீர்வாதம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் சாதனை படைத்த 'நோட்டா'! நாதக-வுக்கு அடுத்ததாக லீடிங்!
இடைத்தேர்தலுக்கு முன் நடந்தது: கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஓதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
ஆனால், 2023 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதே ஆண்டு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் அவரும் கடந்த 2024 டிசம்பர் 14ஆம் தேதி காலமானதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.