மும்பை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.14) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 29வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்த மும்பை அணி, கடைசியாக நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆறுதல் நிலைக்கு திரும்பி உள்ளது. அதேபோல் சென்னை அணியும் தனது கடைசி ஆட்டத்தில் சொந்த மண்ணில் கொல்கத்தாவை வீழ்த்த கையோடு திரும்பி உள்ளது.
சொந்த ஊரில் ஆட்டம் நடப்பதால் மும்பை அணிக்கு சற்று சாதகமான சூழல் நிலவுகிறது. அதேநேரம் சென்னை அணியும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலம் வாய்ந்து காணப்படுகிறது. விளையாட்டில் இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதிக் கொள்வதை எல் கிளாசிகோ என்று அழைப்பது உண்டு. பெரும்பாலும் இந்த சொல் கால்பந்து போட்டியில் பயன்படுத்துவது உண்டு.
தற்போது ஐபிஎல் போட்டியில் இரண்டு பலம் வாய்ந்த அணிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள உள்ள நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது.