ஐதராபாத்:சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது முதலே எம்எஸ் தோனி பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வந்தாலும் அவ்வப்போது விவசாயம், குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்கி அதன் மூலமாகவும் டிரெண்டாகி வருகிறார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெறுவாரா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனி, ஆடும் லெவனில் தான் இறங்கும் இடத்தையும் மாற்றிக் கொண்டார்.
கால் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அணியில் தனது வரிசையை தோனி மாற்றிக் கொண்டதாக கூறப்பட்டாலும், பல்வேறு ஆட்டங்களில் அவரை காணாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், 2025 ஐபிஎல் சீசனில் தோனி களமிறங்குவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் தோனியை அன்கேப்ட் வீரராக அணியில் தக்கவைக்க ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதேநேரம் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிடும் பின் அணியில் தோனியின் நிலை குறித்து தெரியவரும் எனக் தகவல் கூறப்படுகிறது.