தெலங்கானா:ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 - 2023ஆம் ஆண்டு வரை ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முகமது அசாருதீன் பதவி வகித்த காலத்தில் தான் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பதவிக் காலத்தில் ஐதராபாத்தில் உள்ள உப்பல் ராஜீவ் காந்தி மைதானத்திற்கு டீசல் ஜெனரேட்டர், கூடாரம் அமைத்தல் மற்றும் தீயணைப்பு சாதனங்களை வாங்கியதில் 20 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத் போலீசார் முகமது அசாருதீன் மீது 4 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், தன்னுடைய பெயரை கெடுக்கவும், தனது புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்த குற்றச்சாட்டுகள் கூறபடுவதாக அசாருதீன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.