பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை.30) துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாகெர் மற்றும் சரப்ஜோத் சிங் இணை விளையாடியாது. அபாரமாக விளையாடிய இந்திய இணை வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.
கொரியாவின் Lee Wonho மற்றும் Oh Ye Jin இணையை எதிர்கொண்ட இந்திய ஜோடி 16-க்கு 10 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று பதக்கத்தை தட்டிச் சென்றது. ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் வரலாற்றில் இந்திய அணி பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் மனு பாகெர் படைத்து உள்ளார். இதற்கு முன் ஒற்றையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகெர் வெணகலம் வென்று இருந்தார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 22 வயதான மனு பாகெர் பாரீஸ் ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்காக இரண்டு பதக்கங்களை வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பதக்க வென்ற மனு பாகெர் - சரப்ஜோத் சிங் ஜோடிக்கு முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.