திருவனந்தபுரம்:பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் வழங்கும் முடிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி, ஸ்பெயின் அணியை 2-க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷின் பங்களிப்பு என்பது வியக்கத்தக்கது.
அந்த ஆட்டத்தில் கேபட்ன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இணைந்து சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியில் 18 ஆண்டுகளாக விளையாடி வந்த ஸ்ரீஜேஷ் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.