ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டாவது முறையாக அடுத்த மாதம் 5- ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 பேர் வாக்களிக்க உள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 2520 பேர் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 1570 பேர். இவர்கள் தபால் வாக்கு செலுத்தும் வகையில் விண்ணப்பப் படிவம் 12-டி வழங்கப்பட்டது.
இதில் 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 209 பேரும் மாற்றுத்திறனாளிகளில் 47 பேரும் என மொத்தம் 256 பேர் 12-டி விண்ணப்ப படிவம் வழங்கி இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று முதல் தபால் வாக்கு பதிவு செய்யும் பணி தொடங்கியது.
இதில் இரண்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர், ஒரு மைக்ரோ அப்சர்வர், துப்பாக்கி ஏந்திய காவலர் என நான்கு பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று தபால் வாக்கு பதிவு செய்யும் பெட்டியுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தபால் வாக்குப்பதிவு செய்யும் பணியானது இன்று தொடங்கி 24,25,27-ம் தேதி வரை 4- நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த வாக்குப்பதிவு வாக்குச்சாவடி அலுவலர் குழுவினர் அரசியல் கட்சி முகவர்கள் ஆகியோர் வீடுகளுக்கு சென்று வாக்காளர் அடையாளத்தை சரி பார்த்து, படிவத்தை பூர்த்தி செய்து வாக்காளர் கையொப்பம் அல்லது கைரேகை வைத்து பெறப்பட்டு தபால் வாக்கு சீட்டு வழங்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க விருப்பமோ அந்த வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னத்தில் வாக்களிக்கலாம். இதில் வாக்காளர் கண்பார்வையற்றவர் மற்றும் உடல் நலிவுற்ற வாக்களிக்க இயலாத நிலையில் அவர் சார்பில் கட்சி சார்பற்ற ஒருவர் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் உரிய அரசு சான்றிதழ் நகல் வழங்க வேண்டும். இதற்கு முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இந்த பணியை புதியதாக பதவி ஏற்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.