சென்னை: துபாயில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு இன்று காலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 274 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் கொல்கத்தா விமான நிலையத்தை நெருங்கிய போது அங்கு கடுமையான பனிமூட்டத்துடன் மோசமான வானிலை நிலவியது. இதையடுத்து விமானியை தொடர்பு கொண்ட விமான நிலைய கட்டுபாட்டு அதிகாரிகள் விமானத்தை சென்னை விமானநிலையத்திற்க்கு சென்று தரையிறக்கும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 274 பயணிகளுடன் இன்று காலை 10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு குடிநீர், சிற்றுண்டி போன்றவை விமானத்துக்குள்ளையே வழங்கப்பட்டன.
கொல்கத்தாவில் வானிலை சீரடைந்த பின்பு அந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "வழக்கமாக அதிகாலை மற்றும் காலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு, மோசமான வானிலை நிலவும் நேரங்களில் தரையிறங்க வரும் விமானங்கள் அருகில் சீரான வானிலை உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும். அதன்படி தான் துபாயில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்து தரையிறங்கியது.
கொல்கத்தாவில் வானிலை சீரடைந்த பிறகு 274 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமனம் சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்லும்" என தெரிவித்தனர்.