ஐதராபாத்:கென்யாவை சேர்ந்த தடகள வீரர் கிபிகோன் பெட் (Kipyegon Bett) தனது 26வது வயதில் உயிரிழந்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் வெண்கலம் வென்ற கிபொகோன் பெட் நீண்ட காலமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், கல்லீரல் மற்றும் சீறுநீரகம் முழுவதுமாக செயலிழந்ததை அடுத்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு வயது 26. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யா தடகள வீரர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய கிபிகோன் பெட் கடந்த 2018ஆம் ஆண்டு உலக தடகள ஒருமைப்பாடு பிரிவால் தடை செய்யபட்டார்.
எரித்ரோபொய்டின் என்ற ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக அவர் நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். 4 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் அவரால் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி மற்றும் அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள யுஜீன் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனால் மன அழுத்தத்திற்குள்ளான கிபிகோன் பெட் மதுப் பழக்கத்திற்கு கடுமையாகி அடிமையானதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். அதிகப்படியான மதுப்பழக்கம் காரணமாக கிபிகோன் பெட்டின் உடல் பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கத் தொடங்கி உள்ளன. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் மீண்டும் நோய்வாய்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இந்த முறை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு போலந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 800 மீட்டர் தடகளப் போட்டியில் கிபிகோன் பெட் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து 2017ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரது மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ரூ.5 கோடி பணம், சொகுசு வீடு.. நிபந்தனை போடும் பாரீஸ் ஒலிம்பிக் வீரரின் தந்தை!