சென்னை: உலக செஸ் தினமானது 1924 இல் பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக செஸ் விளையாட்டில் குழந்தைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் மற்ற விளையாட்டுகள் உடல் திறனை வளர்க்கும் என்றால் செஸ் விளையாட்டு என்பது மூளை செயல்திறனை மேம்படுத்துகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளி பருவத்திலேயே செஸ் விளையாட்டை விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விஸ்வநாதன் ஆனந்த் கையெழுத்திட்ட செஸ் பலகை:ஜூலை 20ஆம் தேதி உலக செஸ் தினம் என்பதால் மாநில அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தன்னுடைய கையெழுத்து போட்ட செஸ் பலகையுடன் வாழ்த்து கடிதத்தையும் அனுப்பி உள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் கையெழுத்திட்ட செஸ் பலகையை (CHESS BOARD) பெரும் மாணவர்கள் இன்னும் உத்வேகமாக விளையாட உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், "சமீபத்தில் செஸ் உலகை அதிர வைத்துக்கொண்டு இருக்கும் இளம் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா அவரின் சகோதரி விஷாலி மற்றும் குகேஷ் ஆகியோர் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாடி வருகிறார்கள்" என விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்
அவரது கடிதத்தில், “சர்வதேச செஸ் தினத்தில் என்னுடைய வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செஸ் என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது கற்றுக் கொள்ளுதல், தன்னைத்தானே உணர்தல் என முடிவில்லா வாய்ப்புகளுடன் கூடிய ஒரு பயணம். இந்த தினத்தை கொண்டாடும் வேளையில், என்னுடைய பயணத்திலிருந்து சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது நிச்சயம் உங்களுக்கு உத்வேகமளிக்கும்.
எனக்கு அப்போது ஏழு வயது இருக்கும். என்னுடைய குடும்பம் மணிலாவுக்கு குடி பெயர்ந்தது. அங்கு உயிர்ப்புடன் இருந்த செஸ் கலாசாரம் என்னையும் தொற்றிக் கொண்டது. என்னுடைய ஆர்வத்தைக் கண்ட எனது தாயார், விடாமுயற்சியுடன் எனக்கான செஸ் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். தொடக்க கால சவால்களைத் தொடர்ந்து அவருடைய முயற்சி பலனளிக்கத் தொடங்கியது. வார இறுதி நாட்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன்.
என்னுடைய குழந்தைப் பருவத்தில் பல செஸ் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் அனைத்துமே வெற்றிகரமாக இருந்ததில்லை. இருப்பினும், மீண்டும் முயற்சிக்க நான் தயங்கியது இல்லை. அனுபவமிக்க வீரர்களை எதிர்த்து விளையாடியது எனக்கு நல்ல அறிவையும், நம்பிக்கையையும் கொடுத்தது.
இந்த அனுபவங்கள் விடாமுயற்சியின் அருமையை எனக்கு உணர்த்தின. கடந்த போட்டிகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு தொடர்ச்சியாக கற்றுக்கொள்ள முனைந்தேன். நீங்கள் முடிந்த அளவுக்கு நிறைய விளையாட்டுக்களில் பங்கேற்க வேண்டும். அதிலிருந்து விடா முயற்சியுடன் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு போட்டியும் புதிய கற்றலுக்கான வாய்ப்பு. புதிய உத்தியை கற்றுக் கொள்ளலாம், உங்கள் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.
நினைவில் கொள்ளுங்கள், அனைத்து சிறந்த வீரர்களும் ஒரு நாளில் தொடக்க நிலையில் தான் இருந்திருப்பார்கள் (Remember, every great player started as a beginner) சிறந்த நிலைக்கான வழி கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விளையாட்டின் மீதான காதலின் மூலம் கிடைக்கிறது. ஒவ்வொரு சவாலையும் போற்றுங்கள், ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள், சிறந்த நிலைக்கான தணியாத தாகத்துடன் இருங்கள்"இவ்வாறு உலக செஸ் தினத்திற்கான தனது வாழ்த்துச் செய்தியை விஸ்வநாதன் ஆனந்த் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ்நாடு இந்தியாவின் தலைநகர்: FIDE தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 477 வீரர்களைக் கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 209 என்ற எண்ணிக்கையைக் கொண்ட ரஷ்யாவை விட அதிகமாகும். இந்தியாவில் செஸ் விளையாட்டு என பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டின் பெயரை குறிப்பிடாமல் நகர முடியாது. நாட்டின் மொத்த கிராண்ட்மாஸ்டர்களில் 35 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்.
தமிழகத்தில் விஸ்வநாதன் ஆனந்த், சசிகிரண், ஆர்.பி.ரமேஷ், தீபன் சக்ரவர்த்தி, சுந்தர்ராஜன் கிடாம்பி, ஆர்.ஆர்.லட்சுமண், பி.மகேஷ் சந்திரன், எம்.ஆர்.வெங்கடேஷ், எஸ்.அருண் பிரசாத், பி.அதிபன், எஸ்.பி.சேதுராமன், எம்.ஷியாம் சுந்தர், வி.விஷ்ணு பிரசன்னா, கார்த்திக்கேயன் முரளி, வி.ஆர்.அரவிந்த் சிதம்பரம், அஸ்வின் ஜெயராம், கே.பிரியதர்ஷன், என்.நாத், ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ், பி.கார்த்திக்கேயன், என்.ஆர்.விசாக், பி.இனியன், ஜி.ஆகாஷ், ஆர்.வைஷாலி ஆகியோர் கிராண்ட்மாஸ்டராக உள்ளனர். மேலும், உலகிலேயே சகோதர சகோதரிகளாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற பெருமை தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி ஆகியோரையே சாரும்.
ஆனால், ஹரியானாவில் 1, டெல்லியில் 6, ராஜஸ்தானில் 1, குஜராத்தில் 2, மகாராஷ்டிராவில் 10, கோவாவில் 2, கர்நாடகாவில் 3, கேரளாவில் 4, மேற்கு வங்கத்தில் 8, ஒடிசாவில் 2, தெலங்கானாவில் 5 மற்றும் ஆந்திர பிரதேசத்தில் 4 கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர்.
இந்தியாவின் செஸ் பிதாமகன் என்ற சொல்லுக்கு சரியானவர் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தான், இந்திய செஸ் வீர்ர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார் என்றால் அவர் செஸ் விளையாட்டில் செய்த சாதனைகள் ஏராளம். ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பெற்ற இவர் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் வைத்துள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் வாங்கிய பட்டங்கள்: