மெல்பேர்ன்:டென்னிஸ் போட்டியில் ’கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் சிறப்பு வாய்ந்தவை. அதில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
ஜனவரி 7ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென, தனித்தனியாக ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. 21 நாள்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி இன்றுடன் (ஜன. 28) நிறைவு பெற்றது.
இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட இத்தாலி நாட்டை சேர்ந்த ஜானிக் சின்னர், 22 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்று சாதனையை படைத்து இருக்கிறார். இன்று(ஜன. 28) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர் - ரஷ்யாவின் டேனில் மெட்விதேவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களையும் 3-க்கு 6, 3-க்கு 6 என்ற புள்ளி கணக்கில் வென்று டேனில் மெட்விதேவ், கடும் நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் மனம் தளராமல் எழுச்சியுடன் விளையாடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களையும் 6-க்கு 4, 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வென்றார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டி சென்றார்.
ஒரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் முதல் இரண்டு செட்களை இழந்த பின்பும் போட்டியை வென்ற 8வது வீரர் என்ற பெருமையும் ஜானிக் சின்னர் பெற்றுள்ளார். மறுபுறம் அவரை எதிர்ந்து விளையாடிய டேனில் மெட்வெடேவ் 2021, 2022 மற்றும் 2024 என மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி வரை முன்னேறியும் தோல்வி அடைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராரன நோவக் ஜோகோவிச்சை 1-க்கு 6, 2-க்கு 6, 7-க்கு 6 மற்றும் 3-க்கு 6 என்ற செட் கணக்கில் ஜானிக் சின்னர் வீழ்த்தி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 2008ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலியா ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையை ஜானிக் சின்னர் பெற்றார். இதனையடுத்து அவரது வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இதையும் படிங்க:ஆஸ்திரேலிய ஓபன்: 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டி தூக்கிய ரோஹன் போபண்ணா!