கான்பூர்:வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை மட்டும் கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
அன்றைய நாளில் மொத்தம் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்நிலையில், இந்திய அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜாவை காட்டிலும், தமிழக வீரர் அஸ்வினுக்கே, கேப்டன் ரோகித் சர்மா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
அஸ்வினுக்கு முக்கியத்துவம் காரணம் என்ன?
இந்திய லெவனில் இடம் பிடித்த போதும் முதல் நாள் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சில் அஸ்வினுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், களத்தில் இரண்டு இடக்கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில், ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக மஞ்சரேக்கர் கூறினார்.
இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், "ஒவ்வொரு கேப்டனுக்கும் ஆட்டத்தின் மீதான கண்ணோட்டம் என்பது மாறுபட்டதாக இருக்கும். அது அவர் பந்துவீச்சாளர்களை எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்கிறார் என்பதை குறிக்கும். கேப்டன்கள் சில பவுலர்களை அதிகம் நம்பியிருப்பது தவறில்லை.