லக்னோ:17வது ஐபிஎல் கிரிக்கெட்டின் 26வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி - டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நேற்று மோதியது. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் காயத்தில் இருந்து மீண்ட குல்தீப் யாதவ், முகேஷ்குமார் ஆகியோர் டெல்லி அணிக்காக விளையாடினர்.
முதலில் பேட்டிங்க் இறங்கிய குயின்டான் டி காக்கும், லோகேஷ் ராகுலும் 3 ஓவர் பிடித்தனர். அப்போது, வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் பந்துவீச்சால், டி காக் (19 ரன்கள்) எல்டபுள்யூ ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் (3 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். இவ்வாறாக, 3 விக்கெட் இழப்பிற்கு பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் (8 ரன்கள்), நிகோலஸ் பூரன் (0 ரன்கள்) என இருவரும் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சால் அவுட் ஆகினர்.
இதனால், 66 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளைக் கொடுத்து தள்ளாடிய லக்னோ அணியை, அதன் கேப்டன் லோகேஷ் ராகுல் 22 பந்துகளில், 39 ரன்களையும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். இதன் தொடர்ச்சியாக, பேட்டிங்க் செய்த ஆயுஷ் பதோனியின் (55 ரன்கள்) நிதானமான ஆட்டத்துடன், அர்ஷத் கானின் (20 ரன்கள்) பேட்டிங்கும் ரன்களை குவித்தன. ஆட்டம் முடிவில், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்திருந்தது.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் (8 ரன்கள்), பிரித்வி ஷா (32) ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் - பிரேசர் மெக்குர்க் ஆகியோர் இணைந்து திறமையாக ஆடி வெற்றியை நோக்கி அணியை நகர்த்தினர். இதில், குருணல் பாண்ட்யா வீசிய பந்தில் அறிமுக வீரராகிய மெக்குர்க் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார். இதனால், ஆஸ்திரேலிய வீரர் பிரேசர் மெக்குர்க் தனது ஐபிஎல் முதல் போட்டியில் அரை சதம் அடித்தார். பின்னர், நவீன் உல்-ஹக்கின் பந்து வீச்சில் 55 ரன்களில் (2 பவுண்டரி, 5 சிக்சர்கள்) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல, 24 பந்துகளில் 41 ரன்கள் (4 பவுண்டரி, 2 சிக்சர்கள்) எடுத்த ரிஷப் பண்ட், ரவி பிஷ்னோயின் சுழற்பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆகினார். இவரைத்தொடர்ந்து இறங்கிய டிரிஸ்டான் ஸ்டப்ஸ் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசினார். இதனால், 18.1 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதோடு, 6 ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது 2வது வெற்றியாகும். தனது 5 வது ஆட்டமான லக்னோவிற்கு இது, 2வது தோல்வியாகும். இதனால், ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6 ஆட்டங்களில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றும், 9 வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி 5 ஆட்டங்களில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 4 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சரிவிலிருந்து மீளுமா டெல்லி கேபிடல்ஸ்; வெற்றி பெற 168 ரன்கள் இலக்கு! - LSG Vs DC IPL 2024