சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக (Cyclone Fengal) மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். அதேபோல செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று (நவம்பர் 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருவதாலும், இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ விடுமுறை அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று புதன்கிழமை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அறிவித்துள்ளார்.
கன மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி விடுமுறை அறிவித்துள்ளார்.
அதேபோல, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை மாவட்டப் பள்ளிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் வாயிலாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் நவம்பர் 27, 2024 அன்று நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல்
சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்ட தகவல்களின்படி, வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 720 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 520 கி.மீ., புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 640 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி இது நகர்ந்து வருகிறது. தற்போது இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்