ஜெய்ப்பூர்:நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (சனிக்கிழமை) இரவு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக டுபிளசிஸ் - விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில், 44 ரன்கள் எடுத்து இருந்த டுபிளசிஸ், யுஸ்வேந்திர சாஹல் வீசிய பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல்(1), சவுரவ் சவுகான்(9) என யாரும் பெரியதாக சோபிக்கவில்லை.
மறுபுறம் நிதனாமாக விளையாடிய விராட் கோலி, 67 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 113 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (0) முதல் ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் கைகோர்த்த ஜோஸ் பட்லர் அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினார்.
இருவரும் இணைந்து 2வது விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் சஞ்சு சம்சன் 42 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் என 69 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், முகமது சிராஜ் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த ரியான் பராக் 4 ரன்னிலும், துருவ் ஜுரேல் இரண்டு ரன்னிலும் வெளியேறினர். இருப்பினும் 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் நின்று விளையாடிய பட்லர் 58 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் நான்கிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மறுபுறம் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:MI vs DC: மும்பை அணியில் மீண்டும் சூர்யகுமார் யாதவ்! முதல் வெற்றி பெறுமா?