சென்னை:17 வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 7வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர்.
இதில் அதிரடியாக விளையாடிய ரச்சின் 20 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய ரகானே 12 ரன்களில் வெளியேற, மறுபுறம் நிதானமாக விளையாடி கேப்டன் ருதுராஜ் 46 ரன்கள் எடுத்து இருந்து நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதனையடுத்து ஷிவம் துபே - டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் அட்டகாசமாக விளையாடிய துபே, குஜராத் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார். 23 பந்துகளை எதிர் கொண்ட அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 51 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய சமீர் ரிஸ்வி தனது பங்கிற்கு 2 சிக்ஸர்கள் விளாசி 14 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஜடேஜா 7 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன்-அவுட் ஆகினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.