சென்னை:ஒரு நாட்டை சர்வதேச அரங்கில் நேரடியாக பிரதிநிதித்துவபடுத்துவது விளையாட்டு போட்டிகளாகும் ஏனென்றால் ஒரு நாட்டின் சாதனையை குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் எடுத்துச் சென்று பொதுமக்களிடம் சேர்ப்பது விளையாட்டு மட்டுமே!
2024 ஆண்டு சர்வதேச, தேசிய அளவில் நடைபெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளும், அவற்றில் சாதித்த இந்திய, தமிழக வீரர், வீராங்கனைகள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
ஜனவரி:விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2024 ஜனவரியில் அர்ஜுனா விருதை வழங்கினார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வெள்ளிப் பதக்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
நெதர்லாந்தில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் உலக சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தியதன் மூலம் ஃபிடே மதிப்பு 2748.3 பெற்று இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக உயர்ந்தார்.
காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குன்றியோர் பங்கேற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டமும் இரட்டையர் பிரிவில் இரண்டாவது இடமும் பெற்று தமிழக வீரர் பிரத்வி சேகர் சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற 'கேலோ இந்தியா' கோகோ போட்டியில் மகாராஷ்டிரா அணி தங்கம் வென்றது. ஒடிசா வெள்ளி பதக்கமும் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் வெண்கல பதக்கம் வென்றன.
பிப்ரவரி:டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் செய்தார்.
மார்ச்:ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி 2024ஆம் ஆண்டு நடைப்பெற்ற போட்டிகளில் விக்கெட் கீப்பராக மட்டும் செயல்பட்டார்.சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தார்.
ஏப்ரல்:உலக சாம்பியன் போட்டிக்கு தகுதி தேர்வாக நடைபெறும் பிடே கேண்டிடேட் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் 17 வயதான தமிழகத்தை சேர்ந்த குகேஷ் அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு நகமுராவை வீழ்த்தி பிடே கேண்டிடேட் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றார்.
மே: கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோ பிரேக் கார்டு ஓபன் தொடரில் இரண்டு வெற்றிகளை பதிவு செய்த தமிழகத்தை சேர்ந்த வைஷாலிக்கு ( கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி) அதிகாரப்பூர்வமாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் இந்தியாவின் 84 ஆவது கிராண்ட் மாஸ்டர் ஆகவும் இந்திய அளவில் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.
சர்வதேச உலக செஸ் தொடர் நார்வையில் நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கால்சனை தொடரின் மூன்றாவது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
ஜூன்:தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
ஜூலை: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது இதில் இந்தியாவிலிருந்து 112 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் சரத் கமல், சுபா வெங்கடேசன், இளவேனில், வித்யா ராம்ராஜ், பிரித்திவிராஜ் தொண்டைமான், ராஜேஷ் ரமேஷ், பிரவீன் சித்திரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், நேத்ரா குமணன், சந்தோஷ் தமிழரசன், விஷ்ணு சரவணன், ஸ்ரீராம் பாலாஜி உள்ளிட்ட 13 வீரர்கள், வீராங்கனைகள் தமிழகத்திலிருந்து பங்கேற்றனர்.