பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் விளையாட்டின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மகளிர் அணி - ரோமானியாவை எதிர்கொண்டது. தெற்கு பாரீசில் உள்ள எரெனாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி, ரோமானியா மகளிரை 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
இதில் முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அர்ச்சனா காமத் மற்றும் ஸ்ரீஜா அகுலா, 11-க்கு 9, 12-க்கு 10 மற்றும் 11-க்கு 7 என்ற செட் கணக்கில் ரோமானியாவின் எடினா டியாகோனு மற்றும் எலிசபெட்டா சமாரா ஆகியோரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றனர். இந்த வெற்றியி ன் மூலம் இந்திய அணி போட்டியில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 11-க்கு 5, 11-க்கு 7, மற்றும் 11-க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் ரோமானியா வீராங்கனை பெர்னாடெட் சோக்ஸ் என்பவரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். அடுத்தடுத்து இரண்டு வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி புள்ளிப் பட்டியலில் 2-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அதன்பின் நடந்த மற்றொரு ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்ரீஜா அகுலா தோல்வியை தழுவினார். கடும் போட்டியால் விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 8-க்கு 11, 11-க்கு 4, 7-க்கு 11, 11-க்கு 6, 11-க்கு 8 என்ற செட் கணக்கில் ரோமானியா வீராங்கனை எலிசபெட்டா சமாராவிடம் தோல்வியை தழுவினார்.