தஞ்சை: மகர சங்கராந்தியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி சிலை 2000 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தஞ்சை பெரியகோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக் கோயிலில் மஹா நந்தியெம்பெருமான் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார், இந்நிலையில் மகரசங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்திக்கு திரவியபொடி, மஞ்சள், தயிர், பால், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து சுமார் 2000 கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், மலர்கள், லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாகு, முறுக்கு உள்ளிட்ட இனிப்பு வகைகளை கொண்டு மஹாநந்தியெம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட மஹாநந்திக்கு பூஜைகள் செய்யப்பட்டு மஹாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் 108 பசுமாடுகள் அலங்கரிக்கப்பட்டு மஞ்சள்,சந்தனம், குங்குமிட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை,துண்டு போன்ற வஸ்திரங்களை போர்த்தி கோ-பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு வழிபாடுகளில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், ஆடிட்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள்,பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோயில் நந்திக்கு அலங்காரம்
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு நந்திபகவானுக்கு தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துகொடி, திராட்சை உள்ளிட்ட பழங்களாலும் மற்றும் அதிரசம் முறுக்கு சுழியன் உருண்டைகளாலும் மாலைகள் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் சிவபெருமான் சிவகாமசுந்தரி அம்பாள் சுந்தர மூர்த்தி நாயனர் ஆலயத்தினுள் இருந்து கோபுரத்தின் வெளியே கொண்டு வரப்பட்டு திருவூடல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.