அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, கோடைக்கால வெயில் தமிழ்நாட்டில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க, கோடைக்காலத்தில் திட உணவுகளை விட, ஆரோக்கியமான பழங்கள் மற்றும் குளிர்ச்சியூட்டும் பழச்சாறுகளை சாப்பிடுவதில் பலர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
அந்த வரிசையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடைக்காலத்தில் விரும்பி உண்ணும் பழங்களில் முதலிடத்தை பிடிப்பது தர்பூசணி தான். ஆனால், இன்றைய காலகட்டத்தில், பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டும், வண்ணம் செலுத்தப்பட்டு விற்கப்படுகிறது. குறிப்பாக, கோடைக்கால சிறப்புப் பழமாகக் கருதப்படும் தர்பூசணி, வேகமாகப் பழுக்கவும், சிவப்பு நிறத்தில் தோன்றவும் ஊசி மூலம் வண்ணம் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்த வீடியோவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ளது. அதன்படி, கலப்படம் செய்யப்படாத தர்பூசணியை எப்படி வாங்குவது என தெரிந்து கொள்ளலாம் வாங்க...

கலப்படம் செய்யப்படாத தர்பூசணி வாங்குவது எப்படி?:
- FSSAI வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள இந்த எளிய சோதனையைப் பின்பற்றுவதன் மூலம் கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம்.
- கடையில் இருந்து தர்பூசணி வாங்கும்போது, முதலில் ஒரு சிறிய சேம்பிள் துண்டை வெட்டி கொடுக்க சொல்லுங்கள். பின்னர் ஒரு சிறிய காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து வெட்டப்பட்ட துண்டின் உட்புறத்தை தேய்க்கவும்.
- தேய்க்கும்போது பருத்தி அல்லது டிஷ்யூ பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால், அது கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி என வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. இயற்கையாக வளர்க்கப்பட்ட தர்பூசணி நிறம் மாறாது எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எளிய சோதனை மூலம் கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியைக் கண்டறிய முடியும் என்று FSSAI அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தவிர:
- தர்பூசணி பழத்தின் உட்பகுதியில் சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகளுடன் சிறிது வெள்ளை நிறம் இருந்தால், அது ஊசி போடப்பட்டதற்கான உறுதியான அறிகுறியாகும்.
- அதேபோல், தர்பூசணிகளை விரைவாக பழுக்க வைக்க கார்பைடு என்ற ரசாயனம் தெளிக்கப்படுகிறது. எனவே, தர்பூசணியின் மேல் பகுதி மஞ்சள் நிறமாகத் தோன்றினால், அதை உப்பு நீரில் நன்கு கழுவி, பின்னர் சாப்பிடுவது நல்லது.
- மற்றொரு குறிப்பு என்னவென்றால், நீங்கள் தர்பூசணியை எடுக்கும்போது அதை கவனமாகப் பரிசோதிக்க வேண்டும். அதில் எங்காவது ஓட்டைகள் இருந்தால், அதை வாங்க வேண்டாம்.
- மேலும், கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியை வெட்டும்போது, பழத்தில் அதிக விரிசல்கள் இருக்கும்.
- தர்பூசணியை வாங்கும் போது, அதன் அளவுக்கு ஏற்ற கனம் கொண்ட பழத்தை தேர்ந்தெடுங்கள். சில பழங்கள் பார்க்க பெரிதாகவும் கையில் எடுத்தால் எடை இல்லாமல் இருக்கும். இப்படி இருந்தால் வாங்க வேண்டாம்.
- கையால் தர்பூசணியை தட்டி பாருங்கள். அதில் நல்ல ஆழமான சத்தம் வந்தால் பழுத்த பழம். இதுவேம் அதிக பழுத்த பழம் என்றால் வெற்று அல்லது தட்டையாக சத்தம் வரும்.
இதையும் படிங்க:
மஞ்சள் தூள்,கொம்பு மஞ்சளில் கலப்படம்? சந்தேகம் இருந்தால் ஒரு கிளாஸ் தண்ணீர் போதும்!
கருப்பு மிளகில் கலப்படம் உள்ளதா? ஈஸியா கண்டுபிடிக்க சிம்பிள் டிப்ஸ்! - Adulteration in Black Pepper