டெல்லி:டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை முத்தமிட்டது இந்திய அணி. அதன் பின்னர் தாயகம் திரும்ப தயாரான இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. அதாவது பார்படாஸில் திடீரென புயல் வந்தது. இதனால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 3 நாள்கள் பயணம் தள்ளிப் போனது.
இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை பிசிசிஐ சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானம் பார்படாஸ் விமான நிலையத்தில் இருந்து இந்திய அணி வீரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பயணத்தை தொடங்கினர். சுமார் 16 மணி நேரம் பயணத்திற்கு பிறகு இந்திய அணி வீரர்கள் இன்று அதிகாலை (வியாழக்கிழமை) டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
கோப்பை வென்ற இந்திய அணியை காண்பதற்காக அதிகாலை முதலே காத்து இருந்த ரசிகர்கள் டெல்லி வந்தடைந்த வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
பிரதமர் மோடி சந்திப்பு:உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவிக்க உள்ளார். இந்த பாராட்டு நிகழ்வானது இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணி:இதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் விமானம் வாயிலாக மும்பை சென்று சேருகின்றனர். இதனையடுத்து மும்பையில் உள்ள நாரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து மைதானம் வரை திறந்த திறந்தவெளி பேருந்தின் வீரர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு வன்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில் பிசிசிஐ ஏற்கனவே அறிவித்தபடி ரூ.125 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்குகிறது.
கோப்பை ஒப்படைப்பு:இந்த விழாவின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையை முறைப்படி பிசிசிஐ-யிடம் வழங்குவார். இந்த கோப்பை அடுத்த 2 ஆண்டுகளுக்கு பிசிசிஐ தலைமை அலுவலகத்தை அலங்கரிக்கும்.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், "இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியை கவுரவிக்கும் வெற்றி அணிவகுப்பில் எங்களுடன் சேருங்கள்! எங்களுடன் கொண்டாட ஜூலை 4-ம் தேதி மாலை 5 மணி முதல் மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்துக்கு வாருங்கள். தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அப்போ இந்தியா டீமோட புது கோச் கவுதம் கம்பீர் இல்லையா? - பிசிசிஐ அதிரடி முடிவு!