ஐதராபாத்: இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ - ஆஸ்திரேலிய ஏ அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
கடைசி நாளான இன்று காலை இந்திய வீரர்கள் பீல்டிங் செய்ய மைதானத்திற்கு வந்த போது அவர்களிடம் நடுவர் புதிய பந்து வழங்கி உள்ளார். பழைய பந்து குறித்து இந்திய வீரர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு நடுவர் "நீங்கள் பழைய பந்தை சேதப்படுத்திய தடயங்கள் கண்டறியப்பட்டதால் புதிய பந்து கொண்டு வரப்பட்டதாகவும், இது குறித்து தொடர்ந்து பேச வேண்டாம், விளையாடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
X image (Snapshot from X handle) மேலும், நீங்கள் இது குறித்து தொடர்ந்து ஆலோசிக்க வேண்டாம், இந்த பந்தை கொண்டு விளையாடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த இந்திய வீரர்கள் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நடுவர் ஷான் கிரைக்கிடம் தனது அதிருப்தியை தெரிவித்த இந்திய வீரர் இஷான் கிஷன், மிகவும் முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த நடுவர் ஷான் கிரைக், இஷான் கிஷனை கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் இது குறித்து தான் புகார் அளிக்க உள்ளதாகவும், இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இவர்களிடையே நடைபெற்ற காரசார விவாதம் அங்கிருந்த ஸ்ட்ம்ப்பில் பொருத்தப்பட்டு இருந்த மைக் மற்றும் கேமிராவில் பதிவானது.
இந்நிலையில், இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தினரா என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் நடுவர் கிரைக் கொடுத்த அறிக்கையில் பந்து சேதப்படுத்தியது குறித்து முழு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா கைப்பற்றி இருந்த நிலையில், அடுத்து வரும் தொடரையும் இந்தியா எளிதில் வென்று விடக் கூடாது என தற்போது இருந்தே இந்திய வீரர்களை ஆஸ்திரேலியா மிரட்டலுக்கு உள்ளாக்குவது போல் இருப்பதாக இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவுட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:இந்தியா ஒயிட் வாஷ்! 92 ஆண்டுகளில் முதல் முறையாக மோசமான சாதனை!