சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற "World Chess Championship" தொடரில் சீனாவின் டிங் லாரனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்தியாவின் இளம் வீரரான குகேஷ்(18). இதையடுத்து குகேஷ்-க்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் குகேஷ்-க்கு பாராட்டுவிழா நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த விழாவானது சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(டிச.17) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில்,"இந்தியர்கள் அனைவருக்கும் இது ஒரு மகிழ்ச்சியான தருணம். 1991 அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி எனக்கு பாராட்டு விழா நடத்தினார். அதன் பிறகு 34 ஆண்டுகளுக்கு பிறகு குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
செஸ் என்றால் அது தமிழ்நாடு என இந்திய அளவில் இருந்து வருகிறது. இங்கிருந்துதான் முதல் சர்வதேச சாம்பியன், கிராண்ட் மாஸ்டர், வேர்ல்ட் ஜூனியர் சாம்பியன், வேர்ல்ட் சாம்பியன் போன்ற பலர் உருவாகியுள்ளனர். ஒரு திறமையான நபரை கண்டவுடன் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும், தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இதையும் படிங்க: தர்பூசணியில் ’வேர்ல்ட் செஸ் சாம்பியன் குகேஷ்’ உருவம் வரைந்து பழ சிற்பி அசத்தல்!
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்தான் இந்திய செஸ் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. டி.குகேஷை சிறுவனாக இருந்தபோது நான் சந்தித்தேன். அதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷ் குறித்து செல்ல வேண்டும் என்றால் வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுதும் தன்னுடைய அமைதியான குணத்தையே வெளிப்படுத்தி வருகிறார். ஒரு போட்டி முடிந்தவுடன் அடுத்த போட்டிக்கு தயாராகிக் கொண்டிருப்பார் அது தான் அவரிடம் என்னை கவர்ந்த குணமாக பார்க்கிறேன்.
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புதான் அவர் உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு காரணமாக அமைந்தது. இந்த நேரத்தில் குகேஷின் பயிற்சியாளர்கள், அவரது பெற்றோர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
31 கிராண்ட் மாஸ்டர்கள், 2 உலக சாம்பியன்களை கொண்டுள்ள தமிழ்நாடு, இந்திய அளவில் மட்டும் அல்ல; உலக அளவில் கூட சொல்ல முடியும் செஸ் என்றால் அது தமிழ்நாடுதான். வரும் காலங்களில் இன்னும் அதிகமான வீரர்கள் வருவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று விஸ்வநாதன் ஆனந்த் பேசினார்.