சென்னை: கணவர் உயிரிழந்த பின்பு, மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு இந்து திருமண சட்டத்தின் படி உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1946-ஆம் ஆண்டு சின்னு கவுண்டர் என்பவர் சேலத்தில் சில சொத்துக்களை வாங்கியுள்ளார். பின்னர், சேவி கவுண்டர் என்பவருக்கு 1978-ஆம் ஆண்டு அந்த சொத்துக்களை விற்கப்பட்டது. சேவி கவுண்டரின் மறைவுக்கு பின் அவரின் வாரிசுகளான சின்னையன் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொத்துக்கள் மாற்றப்பட்டது.
வழக்கு தள்ளுபடி
இந்நிலையில், சின்னையன் உயிரிழப்புக்கு பின், அவரது மனைவி மல்லிகா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதோடு, சொத்தில் தனக்கும் பங்கு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சேலம் உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சேலம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, சொத்தில் தனக்கு பங்கு வழங்க வேண்டும் என மல்லிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன், குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.
உரிமை உண்டு
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மல்லிகா தனது கணவர் உயிரிழந்த நிலையில் மறுமணம் செய்து கொண்டார். அதனால், உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு தர முடியாது என மறுக்க முடியாது.
'இந்து திருமண சட்டம் 1955'-இன் கீழ், முதல் கணவரின் சொத்தில் பங்கு கேட்க மனைவிக்கு உரிமை உள்ளது. மறுமணம் செய்ததற்காக சொத்தில் பங்கு இல்லை என மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது தவறு எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க |
சின்னையனின் சகோதரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்து திருமண சட்டம்', பிரிவு 24-இன் படி, மறுமணம் செய்த மல்லிகா சொத்தில் பங்கு கேட்க உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டது.
சொத்தை ஒப்படைக்க வேண்டும்
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மல்லிகா தனது உறவினரையே திருமணம் செய்துள்ளதால் அவருக்கான பங்கை மறுக்க முடியாது. கணவனை இழந்த பெண்ணுக்கு சொத்தில் பங்கு கிடையாது என இந்து திருமண சட்டம் கூறவில்லை. மறுமணம் செய்த பெண்ணுக்கு உரிமை இல்லை என்ற இந்து திருமண சட்டத்தின் பிரிவு, 2005-ஆம் ஆண்டே ரத்து செய்யப்பட்டது.
அதனால், இரண்டாவது திருமணம் செய்தாலும் மல்லிகாவுக்கு சேர வேண்டிய சொத்துக்களை பெற எந்த தடையும் இல்லை. நியாயமாக அவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.