சென்னை: இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship தொடரின் 14வது போட்டியில் சீனாவின் டிங் லாரனை வென்றதன் மூலம் உலகின் இளம் வயதில் கிளாசிக்கல் செஸ் சாம்பியன் என்ற வரலாற்றை குகேஷ் படைத்துள்ளார்.
பாராட்டு விழா: இதையடுத்து குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசு சார்பில் பாராட் டுவிழா நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த விழாவானது சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் சாம்பியன் கோப்பையை முதலமைச்சரிடம் காண்பித்து குகேஷ் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் குகேஷுக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
ஹோம் ஆப் செஸ்: இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,"புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம பையன் குகேஷ். தன்னுடைய திறமையாலும் உழைப்பாலும் தன்னுடைய கனவை நனவாக்கி இருக்கிறார். 7 வயதில் பயிற்சிக்குள் நுழைந்து 9 வயதில் கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தை வென்று, 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று, இன்று உலக சாம்பியனாகி இருக்கிறார்.
இவை எல்லாவற்றையும் சாதிக்க குகேஷ் எடுத்துக் கொண்டது 11 ஆண்டுகள் தான். இதற்கு பின்னால் இருக்கக்கூடிய உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இலக்கை நோக்கிய பயணம் இதைத்தான் தமிழக இளைஞர்கள் எல்லோரும் இன்ஸ்பிரேஷனாக கற்றுக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: "உலகளவில் செஸ் என்றால் அது தமிழ்நாடு தான்" விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்!
அதனால் தான் உங்களை எல்லாம் அழைத்து குகேஷுக்கு இந்த பாராட்டு விழா நடத்துகிறோம். ஒரு குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவது முக்கியமல்ல; பங்கேற்பதே முக்கியம். விளையாட்டு வீரர்களை திமுக அரசு எப்போதும் போற்றி பாராட்டி வந்துள்ளது.
செஸ் விளையாட்டை ஊக்குவிக்க 'ஹோம் ஆப் செஸ் அகாடமி' என்ற சிறப்பு செஸ் அகாடமி அமைக்கப்படும். இந்தியாவில் உள்ள 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் என்று சொல்லும் அளவுக்கு துணை முதல்வர் செயல்படுகிறார். இதற்கு துணையாக இருக்கும் அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் பேசினார்.