திருநெல்வேலி: சகோதரனை போன்று ஆசையாக பழகி வந்த நாய்க்குட்டி உயிரிழந்ததை அடுத்து, அதற்கு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்த மாணவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
திருநெல்வேலி டவுண் சொக்கட்டான் தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பகிருஷ்ணன் - நந்தினி தம்பதி. இவர்களின் மகன் மகதீப், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இயற்கை மீதும், செல்லப்பிராணிகள் மீதும் தீராத காதல் கொண்டவராக இருந்துள்ளார். சமீபத்தில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி இறந்த போது, அதன் இறுதிச்சடங்கில் பங்கேற்று யானையின் இழப்பை தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார்.
மாணவர் பிராணிகள் மீது கொண்ட ஆர்வத்தை கேள்விப்பட்ட பாளை காவல் ஆய்வாளர் சாம்சன், மாணவருக்கு நாய்க்குட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மாணவரும் அதற்கு அழகு என பெயர் சூட்டி பாசமாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நாய்க்குட்டிக்கு வைரஸ் நோய் தாக்கியுள்ளது. இதனையடுத்து, ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது.
சுமார் 45 நாள் மட்டும் தன்னுடன் வாழ்ந்தாலும், ஒரு சகோதரனை போன்று ஆசையாக வளர்த்து வந்த நாய்க்குட்டி திடீரென உயிரிழந்ததால், குடும்பத்தில் ஒருவராக நினைத்து இறந்த நாய்க்குட்டிக்கு மனிதர்களைப் போன்று மாணவர் இறுதிச்சடங்கு செய்துள்ளார். இது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
குறிப்பாக, பாடை கட்டி அதில் நாயை ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். இதில், மாணவர் மகதீப் உடன் அவருடைய நண்பர்களும் சேர்ந்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பின்னர், ஊருக்கு வெளியே சிறிய குழி தோண்டி நாயை புதைத்துள்ளனர். முன்னதாக, அனைவரும் நாய்க்கு பால் ஊற்றி மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, மகதீப் மற்றும் அவரது நண்பர்கள் கால்வாய் நீரில் குளித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து மாணவர் மகதீப் நம்மிடம் கூறுகையில், “என்னை அறியாமல் நாய்க்குட்டிகள் மீது எனக்கு பிரியம் ஏற்பட தொடங்கியது. தற்போது நான்கு தெரு நாய்களை வீட்டில் வைத்து பராமரித்து வருகிறேன். நெல்லையப்பர் கோயில் யானை இறந்த போது துக்கம் தாங்க முடியாமல் அழுதேன். இதை பார்க்க சாம்சன் சார் எனக்கு நாய்க்குட்டியை பரிசாக வழங்கினார். ஆனால், நாய்க்குட்டி திடீரென இறந்து விட்டது. நாய்க்குட்டி சகோதரனைப் போன்று பழகியதால் அதற்கு தற்போது இறுதிச்சடங்கு செய்துள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.