கோயம்புத்தூர்: 1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவ வழக்கிவ் கைது செய்யப்பட்ட பாஷா உடல்நலகுறைவால் நேற்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் உக்கடம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் உமர்பாரூக் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஷாவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இறுதி ஊர்வலம்: தொடர்ந்து அவரது உடலானது அமரர் ஊர்தி மூலம் மரக்கடை மேம்பாலம்- புரூக்பாண்டு சாலை- அர்ச்சனா தர்சனா திரையரங்கம் வழியாக பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலுக்கு இன்று பிற்பகல் 3:45 மணியளவில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு பின்னர் அதே வளாகத்தில் உள்ள கபர்ஸ்தானில் 5:40 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. பாஷா மறைவைத் தொடர்ந்து மாநகரில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைக்காக 2 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இஸ்லாமிய சிறைவாசிகள்: முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில்,"கோவை சிறையிலிருந்தபோது பாஷாவுடன் மனம்விட்டுப் பேசி இருக்கிறேன். இது மிகப்பெரிய துயரம். அவரை இழந்து வாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக மீதமுள்ள சிறைவாசிகளை வெளியே கொண்டு வரப் போராடுவோம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் தொடர் போராட்டங்களால் தான் விடுதலையானார்கள். இப்பிரச்சனையை மனிதநேய அடிப்படையில் அணுக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்." என்று சீமான் பேசினார்.
காவல் ஆணையரிடம் மனு: முன்னதாக, கோவையில் உயிரிழந்த குண்டுவெடிப்பு வழக்கின் கைதி பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என கோவை மாநகர காவல் ஆணையரிடம் இந்து அமைப்புகளை சேர்த்தவர்கள் நேரில் மனு அளித்தனர்.
அதில், "தலைமறைவாக இருப்பவர்கள், அல் உம்மா இயக்க தலைவர் பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொள்ள வாய்ப்புள்ளதால், கோவையில் பதற்றமான சூழல் ஏற்படும்.. எனவே பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.