சென்னை: 18 வது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் பாராட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குகேஷுக்கு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட 5 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. முன்னதாக திறந்த வாகனத்தில் பாராட்டு விழா நடைப்பெறும் கலைவாணர் அரங்கிற்கு குகேஷ் அழைத்து வரப்பட்டார்.
விழாவில், உலக செஸ் சாம்பியன் குகேஷ் ஆற்றிய ஏற்புரை:
இங்கு கூடியிருக்கும் அனைவரையும் காண பெருமகிழ்ச்சியாத உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயண்ணா (துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்) உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். உலகின் இளம் வயது செஸ் சாம்பியன் என்ற எனது கனவு இன்று வரலாற்று சாதனையாகியுள்ளது. இதற்கு காரணமான அனைவருக்கும் எனது நன்றிகள். செஸ் போட்டிக்கான இந்தியாவின் தலைநகரம் என்றும், உலக அளவில் செஸ் விளையாட்டுக்கான சிறந்த நகரங்களில் ஒன்று எனவும் சென்னையை நாம் பெருமையாக கூறலாம்.
தமிழக அரசின் ஒத்துழைப்பின்றி எனது இந்த வெற்றி சாத்தியமாகி இருக்காது. இதற்காக தமிழக அரசுக்கு மீண்டுமொரு முறை நன்றி கூறி கொள்கிறேன். செஸ் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க 2022 செஸ் ஒலிம்பியாட் போட்டியை குறுகிய கால அவகாசத்தில் தமிழக முதல்வர் நடத்தி காட்டினார். எனது இன்றைய வெற்றிக்கு, சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி மிகப்பெரிய உந்துதலாக அமைந்தது.
அதற்காக தமிழக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவரும், தமிழக அரசும் பொருளாதார ரீதியாக எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளனர்.
உலக சாம்பியன் பட்டம் பெற்றதற்கு எனது பெற்றோருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். அவர்களால்தான் இது சாத்தியமானது. கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளார். அவருடைய வழிகாட்டுதல் எனக்கு உந்துதலாக அமைந்தது. அவரது வழிகாட்டுதலில் பல திறமையானவர்கள் நிச்சயம் உருவாகுவார்கள் என நம்பிக்கை உள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கு உடல்நலம் மற்றும் மனதிடம் அவசியம். இவற்றை எனக்கு அளித்த கடவுள், எனது பள்ளி நிர்வாகம், ரசிக பெருமக்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று குகேஷ் பேசினார்.