பாரீஸ்:33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் டேபிள் டென்னிஸ் விளையாட்டின் இரண்டாவது சுற்று இன்று (ஜூலை.29) நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய் சர்வதேச தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் பெலிக்ஸ் லெப்ரனை எதிர்கொண்டார்.
ஆரம்பம் தடுமாற்றத்துடன் தொடங்கிய ஹர்மீத் தேசாய், பிரான்ஸ் வீரருக்கு எதிராக புள்ளிகளை குவிக்க முடியாமல் தடுமாறி வந்தார். தொடக்க செட்டை 8-க்கு 11 என்ற கணக்கில் இழந்த ஹர்மீத் தேசாய் அதன் பின் சரணாகதி அடைந்தார். பெரிய அளவில் ஹர்மீத் தேசாயால் சோபிக்க முடியவில்லை.
தொடர்ந்து அடுத்தடுத்த செட்டுகளை 7-க்கு 11, 8-க்கு 11 என்ற கணக்கில் ஹர்மீத் தேசாய் இழந்தார். மொத்தம் 28 நிமிடங்களே நடைபெற்ற இந்த விளையாட்டின் முடிவில் பிரான்ஸ் வீரர் பெலிக்ஸ் லெப்ரான் 4-க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம் ஹர்மீத் தேசாய் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை (ஜூலை.27) நடைபெற்ற முதலாவது சுற்று ஆட்டத்தில் ஹர்மீத் தேசாய் 4-க்கு 0 என்ற கணக்கில் ஜோர்டான் வீரர் அபோ யாமன் சையித் என்பவரை வீழ்த்தி இருந்தார். முன்னதாக மற்றொரு தகுதி சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் சரத் கமல் 4-க்கு 2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் பதக்க கனவு நிறைவுக்கு வந்தது.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் 2024: டென்னிசில் முடிவுக்கு வந்த பதக்க வாய்ப்பு! ரோகன் - பாலாஜி அதிர்ச்சி தோல்வி! - Paris Olympics 2024