ஹைதராபாத்:விளையாட்டு உலகின் திருவிழா என்று அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். 36 வயதான இவர் 328 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ், 2004ஆம் ஆண்டு இந்தியா யு-21 அணிக்காக களமிறங்கினார். அதன்பின் இரண்டு ஆண்டுகளில் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்தார்.
அதன்பிறகு இந்திய அணிக்காக லண்டன் ஒலிம்பிக், ரியோ ஒலிம்பிக், டோக்கியோ ஒலிம்பிக் என மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் தொடர்ந்து 4வது முறையாக பங்கேற்கவுள்ளார். கடந்த 2020ல் இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியதற்கு இவர் தனது சிறப்பான பங்களிப்பினை அளித்தார்.
இந்தியாவிற்காக சிறந்த பங்களிப்பினை அளித்து வரும் இவர் உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வருகிறார். இவரின் திறமைக்கு பரிசளிக்கும் விதமாக 2021, 2022ஆம் ஆண்டுகளில் சிறந்த கோல் கீப்பருக்கான விருதுகளை வழங்கி சர்வதேச ஹாக்கி சம்மேளனம் கவுரவித்தது. இவர் 2025ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2017ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும், 2021ஆம் ஆண்டு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.