பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.2) நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் பி பிரிவில் நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.
ஆட்டத்தின் முதல் பாதியில் 12வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் கோல் அடித்து இந்திய அணியின் வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்ட கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அற்புதமாக கோல் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார்.
இதனிடையே ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி பதில் கோல் திருப்பியது. ஆஸ்திரேலுய கிரைக் 25வது நிமிடத்தில் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் கண்களில் மண்ணை தூவி விட்டு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. மேலும் ஒரு கோல போட்டு டிரா செய்ய ஆஸ்திரேலிய வீரர்களும், அதைத் தடுத்து தொடர்ந்து முன்னிலை வகிக்க இந்திய வீரர்களும் கடுமையாக போராடினர்.
இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. அபாரமாக விளையாடிய இந்திய வீரர்கள் போட்டியின் 32வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்தனர். இதனால் போட்டி 3-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது. இதனிடையே ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கோவர்ஸ் பிளேக் திடீரென கோல் திருப்பி கவனம் ஈர்த்தார்.
மேலும் ஒரு கோல் போட்டால் ஆட்டம் டிராவில் முடியும் பட்சத்தில் இந்தியாவின் கால் இறுதி வாய்ப்பு கேள்விக் குறியாகி விடும். இந்த பதற்றத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடினர். இந்திய வீரர்களின் தடுப்பாட்டத்தை தாண்டி ஆஸ்திரேலிய வீரர்களால் மேற்கொண்டு கோல் போட முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
மேலும், ஒலிம்பிக் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை 52 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வென்றுள்ளது. முன்னதாக 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற முனிச் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் நடைபெற்ற புல் தரை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வென்று இருந்தது. அதன்பின் ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு பின் குறிப்பிடத்தக்க வகையில் இந்திய அணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க:ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 4வது பதக்கம்! இந்திய வில்வித்தை அணி அசத்தல்! - paris olympics 2024