பார்படோஸ்:தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதில் தனது துல்லியமான வேகத்தால் பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் விக்கெட்டுகளை சாய்த்து குறைவான எகானமியுடன் பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ராவிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை பதற வைத்த பும்ரா: டி20 உலகக்கோப்பையின் இந்தியா விளையாடிய முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா தனது வேகத்தால் 3 ஒவர்களில் 1 மெய்டின் ஓவர் உட்பட 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 கிரிக்கெட்டில் எகானமி 2ல் பந்து வீசுவது என்பது சாதாரண காரியம் கிடையாது. இந்திய அணியின் துல்லியமான பந்து வீச்சினால் 96 ரன்கள் மட்டுமே எடுத்து இப்போட்டியில் அயர்லாந்து அணி வீழ்ந்தது.
அடுத்ததாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் 119 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. அந்த போட்டியில் இந்த குறைவான இலக்கை டிஃபண்ட் செய்து இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் ஜஸ்பிரித் பும்ரா. 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரிஸ்வான்,கேப்டன் பாபர் அசாம், இப்திகர் அஹமத் ஆகிய மூவரின் விக்கெட்டுகளை சாய்த்தார். இப்போட்டியில் இவருடைய எகானமி 3.5 ஆகும்.
குரூப் சுற்றில் இந்திய அணியின் மூன்றாவது ஆட்டத்தில் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கனடா உடனான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் 4 போட்டிகளில் 3 போட்டிகள் வெற்றி பெற்று இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
சூப்பர் 8 சுற்றில் கலக்கல்:சூப்பர் 8 போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் 181 ரன்கள் எடுத்த இந்திய அணி 134 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணியை ஆல் அவுட் செய்தது. இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 1 மெய்டன் ஓவர் உட்பட 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து எகானமி 2 க்கும் குறைவாக 1.75 எகானமியில் பந்துவீசி எதிரணிக்கு பெரும் சவாலாக அமைந்தார்.
அடுத்த போட்டியில் இந்தியா வங்கதேசத்தை சந்தித்தது. இந்திய அணி 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 197 ரன்களை சேஸ் செய்த வங்கதேச அணியை தனது வேகத்தால் பும்ரா தொடர்ந்து தொல்லைக் கொடுத்தார். இவர் வீசிய 4 ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே வழங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் இவரின் எகானமி 3.25 ஆகும்.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தமது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரரும் அதிரடி பேட்ஸ்மேனுமான டிராவிஸ் ஹெட் மட்டுமே இப்போட்டியில் இந்திய அணிக்கு தலைவலியாக இருந்த தருணத்தில் அவர்து விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். ஏற்கனவே 50 ஓவர்கள் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக ஹெட்டின் ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வென்ற இந்திய அணி டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் அட்டகாக பந்துவீச்சு:அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 171 ரன்கள் குவித்த இந்திய அணி இங்கிலாந்தை 103 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட் செய்தது. இப்போட்டியில் 2.4 ஓவர்கள் வீசிய பும்ரா 12 ரன்கள் கொடுத்து 4.50 எகானமியுடன் துவக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் மற்றும் ஆர்ச்சரை வீழ்த்தினார்.
இறுதிப்போட்டியில் முக்கிய பங்களிப்பு:இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 176 ரன்கள் எடுத்து 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் ஹெண்ட்ரிக்சை 4 ரன்களுக்கு போல்டாக்கினார். கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 16வது ஓவர் வீசிய பும்ரா கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி வெறும் 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். பின்பு 18வது ஓவரை வீசிய பும்ரா இரண்டு ரன்களோடு யான்சன் விக்கெட்டை வீழ்த்தினார். முக்கியமான தருணத்தில் பும்ரா கொடுத்த பங்களிப்பால் இந்திய அணி இப்போட்டியில் வென்று டி20 உலககோப்பையை வென்றது.
தொடர் நாயகன் பும்ரா:ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய பும்ரா 124 ரன்கள் மட்டுமே வழங்கி 15 விக்கெட் வீழ்த்தியுள்ளார். கடைசி கட்ட ஓவர்களில் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வீசும் இவர் இத்தொடரில் 4.17 மட்டுமே எகானமி வைத்துள்ளது அசாத்தியமான ஒன்றாகும். இவரது சிறப்பான பந்துவீச்சால் இத்தொடரின் 'தொடர் நாயகன் விருதை' வென்று சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஆட்ட நாயகன் சூர்யகுமார் யாதவ்! ஒரே கேட்ச்சால் ஆட்டம் திசை மாறியது எப்படி?