ஐதராபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலியின் ஆட்டம் அதிருப்தி அளிக்கும் வகையில் இருந்தது. மொத்தம் உள்ள 6 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து இருந்தார். இதனால் ரசிகர்கள் தொடங்கி சீனியர் வீரர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், விராட் கோலியின் பார்ம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். இதனிடையே பத்திரிக்கையாளர் சந்திப்பில் அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், "பாண்டிங்கிற்கு இந்திய கிரிக்கெட்டில் என்ன வேலை என கேள்வி எழுப்பினார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை பற்றி எந்த கவலையும் இல்லை. இந்திய கிரிக்கெட்டில் பாண்டிங்கிற்கு என்ன வேலை உள்ளது, அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பார்த்துக் கொள்ளட்டும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள், ஏற்கனவே தங்களை நிரூபித்து விட்டனர். அவர்களிடம் ரன் குவிக்க வேண்டும் என்ற வேட்கை உள்ளது. கடந்த தொடரில் அதுதான் நடந்தது" என்று தெரிவித்தார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் 10 நாட்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள சீதோஷண நிலை மற்றும் மைதான புரிதல் உள்ளிட்ட காரணங்களுக்கு முன்கூட்டியே இந்திய வீரர்கள் அங்கு பயணித்துள்ளனர்.