பாரிஸ்:உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 32 விளையாட்டுக்களில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
இதில் இந்தியாவின் சார்பாக மொத்தம் 16 பிரிவுகளில் 117 இந்திய வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவில் இருந்து 18 வீரர்கள், 11 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 29 பேர் பங்கேற்க உள்ளனர். இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று இன்று நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற தனிநபர் ரேங்க் சுற்றில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் ரேங்கிங் வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின் அங்கிதா பகத் 666 புள்ளிகளுடன் 11வது இடம் பிடித்தார். இவர் 9 முறை துல்லியமாக குறிபார்த்து அம்பினை எய்திருக்கிறார்.