ஹராரே: இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.14) ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது.
அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 58 ரன்கள் விளாசினார். தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீரர் வெஸ்ஸ்லீ மாதவரே இந்திய வீரர் முகேஷ் குமார் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரையன் பென்னட் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதே முகேஷ் குமார் ஓவரில் 10 ரன்கள் எடுத்த நிலையில் பிரையன் பென்னட் ஆட்டமிழந்தார். இதனிடையே களமிறங்கிய டியான் மையர்ஸ் மற்றொரு தொடக்க வீரர் மருமணியுடன் இணைந்து சிறிது நேரம் தாக்குபிடித்தார்.