ஹராரே: இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 தொடர் இன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாப்வே அணி.
ஜிம்பாப்வேயில் தொடக்க வீரர்களாக மருமணி - வெஸ்லி மாதேவேரே ஜோடி களமிறங்கியது. வந்த வேகத்தில் பெஸ்லி ஆட்டமிழந்து பெவிலியன் சென்றார். பிரையன் பென்னட் களம் கண்டார். அவரும் ஒரு பவுண்டரி விளாசி அவுட் ஆனார். இதற்கிடையில், மருமணி 13 ரன்களுக்கு அவுட் ஆக அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே அணி திணறியது.
பின்னர், ராசா களம் கண்டு தொடர்ந்து இரு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், ரிங்கு சிங் வீசிய பந்தை ராசாவால் சமாளிக்க முடியாமல் ஆட்டமிழக்க ஜாநாதன் களம் கண்டார். அவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 7 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 39-5 என்ற கணக்கில் விளையாடியது.
டியான் மியர்ஸ் - கிளைவ் மடாண்டே ஜோடி மிக பொறுமையாக விளையாடியது. அவ்வப்போது இருவருமே மாறி மாறி பவுண்டரிகளை மட்டுமே விளாசினர். 15வது ஓவரில் தான் மடாண்டே அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசி அணிக்கு ரன்கள் சேர்த்து கூடுதல் பலமாக்கினார். இவ்வாறு இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் போது 17வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தைச் சமாளிக்க முடியாமல் மடாண்டே அவுட் ஆனார்.
பின்னர், டியான் மியர்ஸ்க்கு ஜோடியாக வெலிங்டன் மசகட்சா இணைந்தார். ரவி பிஷ்னோய் ஓவரில் டியான் மியர்ஸ் சிக்ஸ் விளாசி தனது அரை சதத்தை பதிவு செய்தார். கடைசி ஓவரான ஆவேஷ் கான் ஓவரை டியான் மியர்ஸ் வெளுத்து வாங்கினார். 20 ஓவர்கள் முடிவிற்கு ஜிம்பாப்வே அணி 159 ரன்களை குவித்து போராடி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் டியான் மியர்ஸ் 65 ரன்களும், மடாண்டே 37 ரன்களும் குவித்தனர்.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ்கான் 2 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர். இந்த 5 டி20 தொடர்களில் இதுவரை 3 டி20 முடிந்துள்ளன. அதில் இந்திய அணி இரண்டு டி20 தொடர்களிலும், ஜிம்பாப்வே அணி ஒரு தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது. நான்காவது டி20 தொடரானது ஜூலை 13இல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய அணியை வழிநடத்தும் கவுதம் கம்பீர்.. இதுவரை செய்த சாதனைகள் என்ன? - GAUTAM GAMBHIR INDIA HEAD COACH