துபாய்:9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோற்றது. இருப்பினும் 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெற்றி கணக்கைத் தொடங்கியது.
இந்தநிலையில் 3-வது ஆட்டத்தில் இந்திய அணி - இலங்கையை எதிர் கொண்டது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத்சிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின், ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். கடந்த போட்டியில் ஆரம்பத்திலேயே பிரிந்த இந்த ஜோடி, இந்த போட்டியில் சிறப்பான தொடக்கம் தந்தது.
இதையும் படிங்க:விராட் கோலிக்கே வாடகைக்கு வீடு கொடுத்த கிரிக்கெட் வீரர்!
நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் சேர்த்தனர். இதில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் என அரைசதம் விளாசி இருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து 4 பவுண்டரி உள்பட 43 ரன்கள் எடுத்து இருந்த ஷபாலி வர்மா, சாமரி பந்து வீச்சில் விக்கெட் இழந்தனர்.
இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத்சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 52 ரன்கள் விளாசிய நிலையில் அவுட்டானார். இதனால் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 172 ரன்களை குவித்துள்ளது.
இலங்கை அணியின் கேப்டன் சமரி அதபத்து, மற்றும் காஞ்சனா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 19.5 ஓவர்களில் 90 ரன்கள் சேர்த்த இலங்கை அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அருந்ததி, ஆஷா சோபனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.